தர்மம்

. *தர்மம்*

*நீங்கள் விரும்பும் பொருள்களிலிருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது”* என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன் 3:92)

அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய பல வழிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று ‘ஸ‌தகா’ என்று சொல்லப்படும் தான தர்மங்கள் செய்வதாகும்.

இந்த உலகத்தில் மனிதன் விரும்பக்கூடிய முக்கியமானவைகளில் முதலாவது செல்வம்தான்! எனவே செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாதவரை நன்மையை அடைய முடியாது என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பொருளாதரத்தைப் பெற்றிருக்கும் ஒரு மனிதன்,அந்த பொருளாதாரத்தில் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் செலவு செய்ததுபோக மீதம் உள்ளதில் அவனால் இயன்ற அளவிற்கு தன்னுடைய உறவினர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் அனாதைகளுக்கும் வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் அவர்களின் கண்ணீர் துடைக்கும் விதமாக, துயர் போக்கும் விதமாக‌ தர்மம் வழங்குவது இஸ்லாத்தின் பார்வையில் அவசியமாகும்.

ஆனால், பொருளாசை நிறைந்த இந்த உலகில் தர்மம் செய்வது என்பது மிகவும் அரிதாகி விட்டது. மரணித்த பிறகு எந்தப் பலனும் தராத செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதை விட, சேர்த்து வைப்பதில்தான் மனிதன் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறான்.

எனவேதான், மனித சமுதாயத்தின் ஒப்பற்ற வாழ்க்கை நெறியான இஸ்லாம், மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதற்காகவும் மனித நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் ஏற்படவேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தர்மம் வழங்குவதை கட்டாயமாக்கி இருக்கிறது.

பொருளாதாரம் என்பது இறைவனின் அருள். இவ்வுலகில் பொருளாதாரம் வழங்கப்பட்டவர்களின் நிலைமையையும் பொருளாதாரம் வழங்கப்படாதவர்களின் நிலைமையையும் நாம் சற்று சிந்தித்துப்பார்க்க கடமைப்பட்டுள்ளோம். வசதி படைத்தவர்களைவிட வசதி அற்றவர்கள் கல்வி, அறிவு, திறமை, கூர்மையான சிந்தனை போன்றவற்றில் உயர்ந்து இருக்கிறார்கள். இருந்தபோதிலும் அவர்கள் ஏழைகளாகவும் அன்றாட‌ம் பணத்திற்கு திண்டாடுபவர்களாவும் இருக்கிறார்கள். எனவேதான் பொருளாதாரம் என்பது என்னதான் திறமை, அறிவு இருந்தாலும் இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.

அதனால்தான் நபித்தோழர்கள் தர்மம் வழங்கும் விஷயத்தில் நான்-நீ என்று போட்டி போட்டார்கள். அவர்களில் செல்வம் படைத்தவர்கள், அதிகமதிகமாக தர்மம் செய்தார்கள். செல்வம் இல்லாதவர்கள் அதை செய்வதற்கு இயலாமல் போனார்கள். தர்மம் செய்ய இயலாம‌ல் ஏழைகளாகளாக இருந்த‌ நபித்தோழர்களுக்கு (தர்மம் செய்வதற்கு ஈடான நன்மை தரக்கூடிய) ஒரு துஆவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். அந்த துஆவையும் வசதி படைத்த சஹாபாக்களும் கற்றுக்கொண்டு ஓதத் துவங்கிவிடுகிறார்கள். இதைக் கண்ட ஏழை சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது அல்லாஹ்வின் அருள்கொடையாகும். அதை அவன், தான் நாடியவருக்கு கொடுப்பான் என்று குறிப்பிட்டார்கள். (நூல்: முஸ்லிம் (ஹதீஸின் சுருக்கம்)

ஆக, செல்வம் என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றாகும். அல்லாஹ் நமக்கு செல்வத்தை கொடுத்து, அதை அல்லாஹ்வுக்காகவே தர்மம் செய்யக்கூடிய மனதையும் நமக்கு கொடுப்பதற்காக, அல்லாஹ்விடம் அதற்கான‌ எண்ணங்கொண்டு நாம் பிரார்த்திக்க வேண்டும். அவன் கொடுத்தவற்றிலிருந்து நாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்பி மனதார தர்மம் செய்யவேண்டும். வசதி படைத்தவர்களாகிய நாம் வசதி இல்லாதவர்களுக்கு எந்த வகையில் உதவினாலும் அதன் மூலம் நாம் முழுமையான பலனை அனுபவிப்போம் என்பதையும், அது மறுமையின் (நம்முடைய நன்மை)அக்கவுண்ட்டில் சேரக்கூடிய தொகையாகும் என்பதையும் நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள்; நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும்; நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன்: 2:272)

செல்வம் படைத்தவர்கள் தான தர்மங்கள் செய்து அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைந்துவிடுகிறார்கள். ஆனால் நாம் எவ்வாறு தானதர்மங்கள் செய்வது, அந்த நன்மைகளை எவ்வாறு அடைவது என்று வசதியில்லாதவர்கள் நினைக்கலாம்.

1 லட்ச‌ ரூபாய் இருக்கும் ஒருவர் 1000 ரூபாய் தர்மம் செய்வதைவிட, வெறும் 100 ரூபாய் வைத்திருப்பவர் தன்னைவிட கஷ்டப்படுபவருக்கு 50 ரூபாய்க்கு செய்யும் தர்மம்தான் மேலானதாகும். ஏனெனில் இறைவன் கொடுத்த‌ தன்னுடைய உடமையில் பாதியை அவர் கொடுத்துவிடுகிறார். ஆக தர்மம் செய்வதற்கு அதிகமான வசதிதான் இருக்கவேண்டும் என்று நினைக்கத் தேவையில்லை. அவரவர்களும் தன்னால் இயன்றளவுக்காவது தான தர்மங்களை செய்யவேண்டும். அதற்கும்கூட‌ சக்தி பெறாத பரம ஏழைகள் மற்றும் வறிய‌வர்கள் ஸதகாவின் நன்மையை அடைவதற்காக‌, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உபதேசங்கள் எவ்வாறு கைக்கொடுக்கின்றன, சுப்ஹானல்லாஹ்!

அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள், இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களில் சிலர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சொன்னார்கள், “இறைவனின் தூதரவர்களே! செல்வச் செழிப்புள்ளவர்கள் இறைவனிடம் மிகுந்த நற்கூலியை (தான தர்மத்தின் மூலம்)சம்பாதித்துக் கொண்டார்கள். அவர்கள் நாங்கள் தொழுவது போலவே தொழுகிறார்கள்; நாங்கள் நோன்பிருப்பது போலவே நோன்பிருக்கின்றார்கள்; அவர்கள் தங்களது தேவைக்குப் போக மிகுதியாயுள்ள செல்வத்திலிருந்து தர்மம் செய்கிறார்கள்”என்று கூறியபோது, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கும், தான தர்மங்கள் செய்திட தேவையானவைகளைத் தரவில்லையா?” எனக் கேட்டுவிட்டு சொன்னார்கள்,

*”உண்மையிலேயே ஒவ்வொரு தஸ்பீஹும் ஒரு தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் ஒரு தர்மமாகும். ஒவ்வொரு தஹ்மீதும் ஒரு தர்மமாகும். ஒவ்வொரு தஹ்லீலும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல செயலைச் செய்யத் தூண்டுவதும் ஒரு சிறந்த தர்மமாகும். ஒரு தீய செயலைத் தடுப்பதும் ஒரு தர்மமாகும். நீங்கள் உங்கள் மனைவியரோடு வீடு கூடுவதும் ஓர் தர்மமாகும்”* என்று கூறினார்கள்.

அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவியிடம் தன் இச்சையை நிறைவு செய்துக்கொள்ளும்போது அதற்காகவும் அவருக்கு நற்கூலி உண்டா?” எனக் கேட்டார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்,”இதில் தடுக்கப்பட்ட(விபச்சாரத்)தை செய்பவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீகளா? ஆகவே இதில் ஆகுமான முறையில் நடந்துக் கொள்பவர்களுக்கும் நற்கூலி உண்டு” (நூல்: முஸ்லிம்)

இன்னொரு ஹதீஸிலே,

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், *“தொழுகைக்காக எடுத்து வைக்கக்கூடிய ஒவ்வொரு அடியும் ஸதகா, பாதையில் இருந்து தீங்கு தருபவற்றை அகற்றுவதும் ஸதகா, உன் சகோதரனைப் பார்த்துப் புன்முறுவல் பூப்பதும் ஸதகா”* என்று கூறியுள்ளார்கள்.

*”இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும்.”* (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

ஆக, அன்றாடம் உண்ணும் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்படும் மக்கள்கூட‌ இவ்வாறாக ஸதகாவின் நன்மைகளை அடைந்துக்கொள்வதற்கு இஸ்லாம் அழகிய நல்லொழுக்கங்களை வழிமுறைகளாக ஆக்கிக் கொடுத்திருக்கிறது. அதே சமயம் சஹாபாக்கள் செய்த தர்மங்களிலிருந்தும் இங்கே நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.

Leave a comment